செவ்வாய், 20 டிசம்பர், 2011

கல்லும் சொல்லும்! -காரஞ்சன்(சேஷ்)


கல்லும் சொல்லும்!

         சிறந்த கல்லில்
         சிற்பியின் கைவண்ணம்
         பிறந்திடும் கண்கவர் சிற்பம்!

         சிறந்த கருப்பொருள்
         கற்பனை வசப்பட
         கவிஞனின் கைகளில்
         உருப்பெறும் நற்கவி!

         கவிதையும் சிற்பமும்
         காலக் கண்ணாடியாம்!

         தோன்றிய காலம்முதல்
         தொடர்ந்துவருங் காலத்திலும்
         கண்ணுக்கும் கருத்துக்கும்
         விருந்தாகும் சிற்பம்!
      
         செவிக்கு விருந்தாகி
         சிந்தனையைத் தூண்டும்
         சிறந்த நற்கவிதை!

         படைப்பதனால் இருவருமே
         படைப்புலக பிரம்மாக்கள்!

         வாழ்ந்த காலத்தின் சுவடுகளை
         வருங் காலத்திற்கு அளிப்பர்
         இந்த சிந்தனைச் சிற்பிகள்!

         படைத்தவர் மறையலாம்
         படைப்புகள் மறையுமோ?

         ஆண்டு பலகடந்தும்
         சான்றாய் நின்று அவை
         சாற்றிடும் அவர் புகழை!
                                        
                                                          -காரஞ்சன் (சேஷ்)

பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

22 கருத்துகள்:

  1. "கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை" கவிதையும் சிற்பமும் போன்றே அணைகளும் அன்றைய பிரம்மாக்களின் பேர் சொல்லி நிற்கின்றன. அதை மறந்து இன்று அவற்றிலேயே இனத் துவேஷம் பாராட்டி ஒருவருக்கொருவர் அழித்துக் கொண்டு இருக்கிறோம். அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
  2. // படைத்தவர் மறையலாம்
    படைப்புகள் மறையுமோ?//

    அதானே... படைப்புகள் மறைவதில்லை - என்றுமே...

    நல்ல கவிதை நண்பரே... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. வடிவான சொற்களில் காவியம் படைத்த இக்கவிதையும் மறையாது நண்பரே ..
    அழகிய படைப்பு ... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. கல்லும் கவிதை சொல்லும்.
    கல் மனதோ கொண்டனர்
    கல் கொண்டு கட்டிய அணைக்கட்டுக்கு
    கலவரம் செய்வோர். .. ..
    கவிதை மனம் மலரட்டும் . ..
    கண்ணகிக்கும் கல் கொண்டு வந்தோம்
    கோயிலையும் அங்கு எழுப்பினோம்
    இருப்பினும் ஏனோ அங்கு கல் மனது. .. ..
    உங்கள் கவிதை . ..
    எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது.
    நன்று.

    பதிலளிநீக்கு
  5. வாழ்ந்த காலத்தின் சுவடுகளை
    வருங் காலத்திற்கு அளிப்பர்
    இந்த சிந்தனைச் சிற்பிகள்!

    அருமை..

    பதிலளிநீக்கு
  6. மிக எளீமையான அழகான லே அவுட், கவிதை அழகு

    பதிலளிநீக்கு
  7. அன்பின் காரஞ்சன் - அருமையான கவிதை - மிக மிக இரசித்தேன் - கல்லில் கைவண்ணம் - பிறந்திடும் சிற்பம். கருப்பொருள் கற்பனையில் உருப்பெறும் நற்கவி. கண்ணுக்குச் சிற்பம் - சிந்தனைக்குக் கவிதை. படைத்தவர் மறைய படைப்புகள் அழியாது நிற்கும். அருமையான சிந்தனையில் அழகான கவிதை. நல்வாழ்த்துகள் காரஞ்சன் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு