புதன், 7 மார்ச், 2012

என் மகள் - காரஞ்சன்(சேஷ்)

                                                                  என் மகள்!
நண்பர்களே!

2005ஆம் ஆண்டு என் மகள் பற்றி நான் எழுதிய கவிதை
இது. பள்ளிக்குச் செல்லும் குழ்ந்தைகள் இருக்கும்  இல்லங்களில்  இப்பதிவில்  கூறியுள்ள இந்நிகழ்வுகள் இயல்பே!


ஊர்தூங்கும் வேளையிலே
ஊன்றிப் படித்திடுவாள்!
பாரினில் புகழ்பெறவே
விரிந்திடுமே அவள் கனவு!

சுட்டிவிகடன், சுவையான சிறுவர்மலர்,
கட்டை அவிழ்த்துக் கண்டெடுத்த சிறுவர்மணி
குழ்ந்தைகள் இதழான கோகுலம் இவையனைத்தும்
எடுத்து வைத்திருப்பாள் எப்போதும் பக்கத்தில்!

படித்தது போதும், படுத்துறங்கு எனச் சொன்னால்
தீராதகோபம், திரும்பிடுமே என் மீது!
எனைப்பாராது முகம் திருப்பி
படுத்தபடி முணுமுணுப்பாள்!
கணப்பொழுதில் என்கழுத்தைக்
கட்டிக் கதை கேட்பாள்!

பாட்டோ, கதையோ பாதி முடிக்குமுன்னே
தொட்டிலிட்டு தாலாட்ட
தொடர்ந்துறங்கும் சேய்போல்
நீட்டிய கால்மடக்கி
நித்திரையில் ஆழ்ந்திடுவாள்!

காலையில் துயிலெழுப்பக்
கடுந்தவம் புரிதல்வேண்டும்!
பள்ளிக்குப் புறப்படவே
பார் மகளே நேரமிது
என்றன்னை எழுப்பிட்டால்
தூக்கம் வருகிறதே
தொந்தரவு ஏன் என்பாள்!

ஒருவழியாய்த் துயிலெழுப்பி
உடனிருந்து பணிவிடைகள்
நீராடி முடிக்குமுன்னே
சீருடைகள் அணிவகுக்கும்!

ஊட்டிவிட்டால் உணவை
"உவ்வே.." என மறுப்பாள்!
அப்பா நிலையோ
அந்தோ பரிதாபம்!

மதிய உணவும்
மறக்காமல் தண்ணிரும்
பொதியாய்க் கனக்கும்
புத்தகப் பையுமேந்தி
அம்மா உடன்வருவாள்
அவளை வழியனுப்ப!

புறப்படும் முன்னரே
போயிருக்கும் பேருந்து!
வண்டியுடன் நிற்குமெனை
ஏறெடுத்துப் பார்த்து
இயம்பிடுவாள் இவ்வாறு!

"விரைந்து என்னை நீங்கள்
விடவேண்டும் பள்ளியிலே
நேரம் கடந்துவிட்டால்
நீள்கதவை மூடிடுவர்!"

அருமை மகளின்
அன்புக் கட்டளைக்கு
மறுப்பேதும் சொல்ல
மனம்வருமோ எந்தனுக்கு?

                                                      -காரஞ்சன்(சேஷ்)

11 கருத்துகள்:

  1. நல்ல கவிதை நண்பரே.... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை. குழந்தைகள் எப்போதும் நம்மை மகிழ்விப்பவர்களே!
    பகிர்வுக்கு நன்றிகள். வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் மகளுக்கும்.

    பதிலளிநீக்கு
  3. கவிதை உணர்வு பூர்வமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி!

      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு