ஞாயிறு, 25 மே, 2014

ஜாதிப்பூ- சிறுகதைக்கான விமர்சனத்திற்குப் பரிசு!

மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டியில் "ஜாதிப்பூ" கதையின் விமர்சனத்திற்கு எனக்கும்
என் மனவிக்கும் பரிசு கிடைத்துள்ளது. 
 
சரிசமமாகப் பரிசு பெறும் ஆறு பேர்களில் நாங்கள்இருவரும் இடம்பெற்றுள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

 
வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி!


"ஜாதிப்பூ" கதைக்கான இணைப்பு:

பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16-equal-prize-winners-list-3-of-3.html



என் மனைவி எழிலியின் விமர்சனம் இதோ ....


கோயில் வாசலில் கதை தொடங்குகிறது. பூ வியாபரம் செய்யும் பாட்டி, அவளுக்குப் போட்டியாக ஒரு பருவவயதுப் பெண் புதுவரவு என அருமையான காட்சி கண்முன் விரிகிறது. “பூக்களை விட அந்த பூக்காரி நல்ல அழகு” என்று  உரைப்பதிலேயே அவள் அழகைக் கண்முன் நிறுத்தி விடுகிறார். அதற்கேற்ப படங்களும் மிக அழகு!. கடைக்கண் பார்வைக்குக் காத்திருக்கும் இளைஞர்கள் பாழும் நெற்றியில் திருநீற்றுப் பட்டை அணிவதாகக் காட்டியது அருமை! யதார்த்தமும் கூட!

பருவமங்கையோ படு சுட்டி. வியாபாரத்தில் கெட்டி! அவளின் சாதுர்யத்தால் பூக்களை சீக்கிரம் விற்றுத் தீர்ப்பதும், பாட்டியின் வியாபாரம் படுத்துப் போவதாகக் காண்பித்ததும் போட்டியான புதுவரவு யார்? ஏன்? என்ற கேள்வியை நம்முள் எழுப்பிச் செல்கிறது. என் பிழைப்பைக் கெடுக்க வந்தது போல் இருக்கிறது என பாட்டி சொல்வது நம் எதிர்பார்ப்பை மேலும் தூண்டுகிறது.

பூக்களை விற்றுத்தீர்த்ததும், பாட்டியைப் பார்த்து கண்சிமிட்டி “வரட்டுமா பாட்டி?”எனக் கூறி அந்தப் பெண் செல்வதாய்ச் சித்தரிக்கும்போதும், பார்த்து ஜாக்கிரதையாய்ச் செல்லும்படி பாட்டி சொல்வதாகக் குறிப்பிடும்போதும் கதையில் இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு உறவு இருக்குமோ என்ற எண்ண மாற்றம் ஏற்படுகிறது.
இனி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்தான் அவள் வருவாள் என பாட்டி கூறியதும், அவளை இனிமேல் செவ்வாய், வெள்ளிகளில் கூட வரவேண்டாம் எனக் கூறிவிடுமாறு ஒரு இளைஞன் (நம் கதையின் நாயகன் உரிமையுடன் குறிப்பிடுவதாக) அறிமுகமாகிறார். நாயகனுக்கு அவளைப் பலரும் மொய்ப்பது போல் சூழ்வது பிடிக்கவில்லை என்று காண்பித்து அந்தப் பெண்ணின் மேல் அவனுக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதை உணர்த்திவிடுகிரார்.,
பாட்டிக்கும் அவனுக்கும் என்ன உறவு? எனும் கேள்வியை நம்முள் எழுப்பி, அதற்கான விடையைத் தந்தது இன்னும் சிறப்பு. பாட்டி அவனைப் “பேராண்டி” என உரிமையாக அழைப்பதும், அவ்விளைஞன் தன் சிறுவயது முதல், படிப்பை முடித்து வேலையில் சேர்ந்துள்ளவரை, அனைத்து நிகழ்வுகளையும் பாட்டியிடம் ஒளிவு மறைவின்றிப் பகிர்ந்து வருவதாகக் குறிப்பிட்டு, அவர்களுக்குள் ஒரு ஒட்டுறவு இருப்பதை வெளிப்படுத்தி விடுகிறார்.
  
சிறுவயதில் அவனுக்கு அனைத்துப் பூக்களையும் அறிமுகம் செய்து வைத்த பாட்டியிடம், “பூக்களிலுமா ஜாதிப்பூ என்று ஒரு ஜாதி தனியாக இருக்காப்பாட்டி?” என்று கேட்பதாக அமைத்து, அதன் மூலம், அவன் மிகவும் புத்திசாலி, விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ற பண்பாளன் எனப் பாத்திரத்தை மெருகேற்றிவிடுகிறார்.

மேலும் உடல்நலம் குன்றியிருந்த பாட்டியை ஒருநாள் மழையில் நனையாமல் காத்து, அவளது உறைவிடத்தில் கொண்டு சேர்த்ததாக அமைத்து அவன் இரக்ககுணமும், முதியோரிடத்தில் பற்றும், பொறுப்புணர்வும் கொண்டவன் என்பதை உணர்த்திவிடுகிறார்.

புத்தம்புது வரவான அந்த ஜாதிப்பூவை விரும்பி மாலையிட்டு மணமுடிக்க எண்ணி, பாட்டியிடம் அந்த எண்ணத்தைப் பக்குவமாய்ப் பகிர்ந்துகொண்டவிதம் அருமை. அவ்வேளையில் ஆலய மணி ஒலித்திட, அதை நல்ல சகுனமாய் பாட்டியும் அவனும் நினைத்து மகிழ்வதிலிருந்து, இறைநம்பிக்கை மிகுந்த அவர்கள் இருவரும் நிச்சயம் அவ்வெண்ணம் ஈடேறும் என நம்பிக்கை கொண்டதில் வியப்பில்லை.

பாட்டியிடம் ஆசிர்வாதம் கேட்கும்போது, கதையின் திருப்பம் விளைகிறது. வெளியூரிலிருந்து வந்த தன் பேத்தி ஒருவாரத்திற்கு அவளுடனேயே பூ வியாபாரம் செய்யப் போவதாகவும், ஆனால் தான் யார் என்பதை யாருக்கும் சொல்லிவிடக்கூடாது என வாக்குறுதி பெற்றுக்கொண்டதால் தன் பேத்திதான் அவள் என்பதை அவனிடம் கூற இயலாமல் தவிக்கையில் அவள் கொடுக்கும் வாக்கை நிச்சயம் காப்பாற்றுவாள் என்பது உறுதிசெய்யப்படுகிறது.

“எல்லாம் உன் மனசுப்படியே நல்லபடியாகவே நடக்கும்டா மாப்ளே!” என ஆசீர்வதிக்கையில் பாட்டியின் மனதில் பேராண்டியை மாப்பிள்ளையாக்கிக் கொள்ள முடிவு செய்தது வெளிப்படுகிறது. கோயிலில் மங்கல் இசை முழங்குவதாகக் காட்டி கதைக்கு சுபமான முடிவுதான் என்பதைக் குறிப்பால் உணர்த்தி, அதற்கேற்ப மணமாலை படங்களையும் இணைத்து அருமையாக முடித்துள்ளார்.

மொத்தத்தில் “ஜாதிப்பூ” நறுமணம் கமழும் பூ தான். ஜாதிப்பூவை கையோடு கைசேர்த்து சூடிப்பார்க்கும் நேரம் விரைவில் நெருங்கட்டும். பூமாலைகள் அவர்களின் தோள்சேரட்டும்!. நல்லுளங்கள் இணைந்து பாட்டிக்கு தம் நன்றிகளைச் செலுத்தட்டும்!
எளிய குடும்பத்தில் ஏற்படும் காதலை சித்தரிக்கும் விதம் அருமை! பருவப்பெண், பாட்டிக்குப் பழக்கமான இளைஞன், பூ விற்கும் பாட்டி  என எளிமையான, எதார்த்தமான பாத்திரங்களைத் தெரிவு செய்து, நல்லுளங்களாய் அவர்களைக் காட்டி, நல்ல முடிவைத் தந்த கதாசிரியருக்கு ஒரு சபாஷ் சொல்லத் தோன்றுகிறது. நன்றி!


என்னுடைய விமர்சனம்:

ஆலய வாசலில் அறிமுகம் ஒரு பருவப்பூ!
பருவமங்கையின் தோற்றத்தில் வனப்பு!
அமர்க்களமாய் ஆசிரியரின்  வர்ணிப்பு!
அதற்கேற்ப அனைத்துப் படங்களும் சிறப்பு!
 
இளைஞர்க்கு அவளிடம் ஏதோ ஓர் ஈர்ப்பு!
பலாப்பழம் நாடும் ஈக்கள்போல் மொய்ப்பு!
கோயிலுக்கு வரும் கூட்டம் அதிகரிப்பு!
பூக்காரப் பாட்டியின் வியாபாரம் குறைப்பு!
பாழும் நெற்றிகளில் திருநீறும் அதன் பாதிப்பு!
 
மங்கையின் திறனால், பூக்கள் விரைவில்விற்றுத்தீர்ப்பு!
பாட்டிக்குப் பொறாமை இல்லாதது கதையில் பிடிப்பு!
பலர் வந்து அப்பெண்பற்றி பாட்டியிடம் விசாரிப்பு!
யாரென்று அறியேனென பாட்டியின் பதிலிறுப்பு!
செவ்வாய் வெள்ளி இனி வருவாள் என உரைப்பு!
கேட்டதும் ஓர் இளைஞனின் பதைப்பு!
அவளைப் பலரும் சூழ்வதில்  வெறுப்பு!
அவளை  வாராதிருக்க பாட்டி மூலம் கண்டிப்பு!
 
 அறியாப் பருவம் முதல் அவனைஅறிந்ததால்
“பேராண்டி” என அன்புடன்அழைப்பு!
பக்தியில் அவனுக்கோ மிகவும் விருப்பு!
அன்றாடம் ஆலயம் வருவதில் லயிப்பு!
உழைத்துப் பிழைப்பதில் பாட்டியின் பிடிப்பு
உண்டாக்கியது நாயகனுக்கு அவள்மேல் விருப்பு!
பாட்டியின் நலனில் அவனுக்குப் பொறுப்பு!
மழையில் நனையாமல் காத்தது சிறப்பு!
பட்டியல் நீளும் பூக்களின் தொகுப்பு
சிறுவயதில் அவனுள்ளே பாட்டியின் விதைப்பு!
பூக்களிலும் ஜாதியுண்டோ? கேள்வியின் தொடுப்பு!
கேட்டதும் பாட்டி அடைந்தாள் மலைப்பு!
பாட்டிக்கு அவன் திறனில் மதிப்பு!

வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் உரைப்பு!
ஏதும்  அதிலில்லை ஒளிப்பு, மறைப்பு!
இருவருக்கும் இது அன்றாட நடப்பு!

 
ஜாதிப்பூவை மணந்திட விருப்பு!
பாட்டியிடம் அதை உரைப்பதும் சிறப்பு!
ஆலய மணியும் அவ்வேளையில் ஒலிப்பு!
அதனால் அவனுள் விளைந்தது களிப்பு!
 
சேதியை அறிந்ததும் பாட்டிக்கும் வியப்பு!
பேத்திக்கு ஏற்ற வரனென நினைப்பு!
அவளும் அடைந்தாள் அளவிலாப் பூரிப்பு!
பேத்திதான் அவளென உரைத்திடத் துடிப்பு!
கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தவிப்பு!
அப்படியே நடக்கும் என ஆசீர்வதிப்பு!
அவ்வேளை மங்கல இசையும் ஒலிப்பு!
இருவரைச் சேர்ப்பது இனி பாட்டியின் பொறுப்பு!
அன்புளம் இணைவது அனைவரின் எதிர்பார்ப்பு!
யாருக்கும் இல்லையதில் எதிர்ப்பு!

விடுப்பரோ அனைவருக்கும் அழைப்பு!
இதுவன்றோ கதையின் உயிர்ப்பு!
ஜாதிப்பூ ஒரு அருமையான படைப்பு!
 
சிறுகதைகளின் அணிவகுப்பு!
சிந்திக்க வைக்கும் முனைப்பு!
சமுதாயச் சூழல்கள் சித்தரிப்பு!
சிறந்த நடையில் படைப்பு!
கோர்வையாய் எடுத்துரைப்பு!
அத்தனையும் தித்திப்பு!
இவையே கதாசிரியரின் சிறப்பு!
எல்லோர் மனங்களிலும் இடம்பிடிப்பு!
வைகோ அவர்களுக்கு வழங்கிடுவோம் இனிப்பு!
நல்ல தீர்ப்பு  இனி நடுவரின் பொறுப்பு!
---------------------------------------------------------------
-காரஞ்சன்(சேஷ்)

17 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  2. சிறுகதை விமர்சனப் போட்டியில் தாங்களும் தங்கள் துணைவியாரும் சேர்ந்து பரிசு பெற்றமைக்கு, உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும், என் சார்பிலும் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    மேன்மேலும் பல பரிசுகள் பெறவும் நல்வாழ்த்துகள்.

    இந்த இனிமையான வெற்றிச்செய்தியினை, தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.

    அன்புடன் கோபு [ VGK ]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பளித்த தங்களுக்கு எங்களின் நன்றி! தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் மிக்க நன்றி! தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றீ ஐயா!

      நீக்கு
  3. சரிசமமாக பரிசு பெற்ற அறுவரில் நீங்கள் இருவர் என்று தெரிந்த போது எனக்கும் மகிழ்ச்சி. நீங்கள் மின்னஞ்சல் மூலம் கேட்டுக்கொண்டபடியே நான் நடந்து கொண்டேன்... :)))

    பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள். மேலும் பல பரிசுகள் பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. தம்பதி சமேதராக பரிசு பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள்..
    பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது!எங்களின் உளமார்ந்த நன்றி!

      நீக்கு
  5. வித்தியாசமான விமர்சனத்தை மீண்டும் உங்கள் பதிவிலும் ரசித்தேன்...

    வாழ்த்துக்கள் ஐயா....

    பதிலளிநீக்கு
  6. அன்பின் சேஷாத்ரி - இருவர் ஒரே பணியினைச் செய்தாலும் - இரண்டு விமர்சனங்களும் வெவ்வேறு விதங்களீல் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டு அருமையாக வெளி வந்துள்ளன. நடுவரும் நல்லதொரு பரிசீலனையில் பரிசுகள் வழங்கி உள்ளார். இருவருக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  7. பதில்கள்
    1. கதையை உங்கள் போக்கில் அழகாகச் சொல்லி இருவரும் சரியாக விமர்சித்திருக்கிறீர்கள் சேஷாத்ரி. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

      நீக்கு
    2. தங்களின் வருகையும் வாழ்த்தும் மிக்க மகிழ்வளித்தது! தங்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றி!

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு